ஒமர் அப்துல்லா - ஆர்எஸ்எஸ் மோதலுக்கு காரணமான அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன?

உமர் அப்துல்லா - ஆர்எஸ்எஸ் மோதலுக்கு காரணமான அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன?


370 வது பிரிவு உருவானது எப்படி?

இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்...

சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.

அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்கஅரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டார். 

அதன்பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் பேசி, அம்பேத்கருடன் கலந்து பேசி பொருத்தமான அரசியல் பிரிவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், கடைசியில் கோபாலஸ்வாமி அய்யங்காரால்தான் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது. கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள் திவானாகவும் பதவி வகித்தார்.
370 வது பிரிவு சொல்வதென்ன...?

* இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. 

* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 

* ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். 

* ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். 

* அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. 

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது. 

* முதலில் உருவாக்கப்பட்ட 370 வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என கூறப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில், அதாவது 370 வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது. 

* அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.
- பா. முகிலன்


Posted by tamilnadu on 8:26 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "ஒமர் அப்துல்லா - ஆர்எஸ்எஸ் மோதலுக்கு காரணமான அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன?"

Leave a reply