முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் இப்போது சிக்கினர்.



பாணந்துறை புதிய பாலத்திற்கு அருகில் ஹோட்டல் வியாபாரம் செய்து வரும் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் ஞாயிறன்று அதிகாலை இரண்டு மணியளவில் தமது சொந்தக் கிராமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது வத்தல்பொல வெள்ளைக் கோயில் முச்சந்திக்கு அருகில் முகமூடியணிந்த கோஷ்டியினர் வீதி மறித்து தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,வழமையைப் போன்று தமது வியாபார நடவடிக்கைகளை நிறைவு செய்துவிட்டு சொந்தக்கிராமம் நோக்கி இவ்விரு வர்த்தகர்களும் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது திடீரென வழிமறித்த முகமூடியணிந்த கோஷ்டியினர் நீ முஸ்லிமா? என கேள்வியெழுப்பியவாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் குறித்த வீதியில் பிரயாணித்துக் கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை வழிமறித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அவ்வழியில் வாகனத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திஸ்ஸ குமார சம்பவம் இடம்பெற்ற குறித்த இடத்திற்கு சிவில் உடை தரித்து பொலிஸாரை அவ்வாகனத்திலேயே அனுப்பினர்.

அவ்வேளை, குறித்த வாகனத்தை வழிமறித்த முகமூடியணிந்த கோஷ்டியினர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது சிவில் உடைதரித்த பொலிஸார் அவர்களை கையும் மெய்யுமாக பிடித்தனர். தற்போது குறித்த கோஷ்டியைச் சேர்ந்த இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ள போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான பாணந்துறை தொட்டவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இலியாஸ் காசீம், (வயது – 46) ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம்.எச்.எம். அத்தாஸ், (வயது – 51) ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.(வீரகேசரி)

Posted by tamilnadu on 12:35 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் இப்போது சிக்கினர்."

Leave a reply