பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் ஏன் அழைக்கப்பட்டார்- யாருக்காக!


1947 இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து எந்த ஒரு பாகிஸ்தான் தலைவரும் இந்தியாவின் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படாத பொழுது, ஒரு ஹிந்துத்துவா சக்தியான பிஜேபியின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு தனது பரம எதிரியாக கருதுகிற பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீஃபை அழைத்ததை உலகமே விந்தையாகப் பார்க்கிற பொழுது, இந்தியாவில் பிஜேபி நாங்கள் அண்டை நாடுகளுடன் நட்பு பாரட்டப் போகிறோம் என ஒரு போலித் தனமான கருத்தை முன் வைக்கிறது. இது உண்மையா என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நவாஸ் ஷரீஃப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். மிகப் பெரிய செல்வந்தர், இத்திஹாத் குழுமம் என்கிற தொழிற் குடும்பத்தின் மூத்த மகன். இவர் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கள் கொள்கையை தான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த எல்லாக் காலங்களிலும் பின்பற்றியிருக்கிறார். அதன் மூலம் மிகப் பெரிய இழப்பை அந்நாடு சந்தித்திருக்கிறது. இப்படிப்பட்ட இவர், சென்ற ஆண்டு நடந்த பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

இந்த முறையும் அவர், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையிலிருந்து பின் வாங்கவில்லை. இவரது இந்த செயல் திட்டத்தை பற்றி, கடந்த செப்டம்பர் 25, 2013 அன்று வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை,” பாகிஸ்தான், அதன் திறமையற்ற 35 சதவீத மாநில அரசுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்க உள்ளது.இதை இன்னும் மூன்று ஆண்டுகளில் விற்று முடிக்க வேண்டும் என அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சார நிறுவனங்கள், பாகிஸ்தானின் மாநில எண்ணெய் நிறுவனங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனம் மற்றும் இரும்புத் தொழிற் சாலைகள் ஆகியவை அடங்கும்......” எனச் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கலாம். தொடர்பு இருக்கிறது.

அதானி, அம்பானி மற்றும் டாடா
________________________________

அதானி குரூப்ஸ்
_________________

அதானி குரூப்ஸ் என அறியப்படுகிற இந்த தொழில் குடும்பம் மோடிக்கு மிக நெருங்கியவர்கள் ஆவர். மோடியின் தேர்தலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தக் குடும்பம் தான் செய்து கொடுத்தது என்பதை சில ஊடகங்களில் செய்தியாக வந்ததை அனைவரும் அறிவர். எந்த அளவிற்கு எனில், அதானி குடும்பத்தின் சொந்த விமானத்தில் தான் மோடி சில சமயங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்றால், உறவின் நெருக்கத்தை விளங்கிக் கொள்ளலாம். இந்த அதானி குழுமத்தின் பிரதான தொழில் என்னவென்றால் மின்சாரம் தயாரித்து விற்பனை செய்வது. இதன் மூலம் இவர்கள் பல டிரில்லியன்களை சம்பாத்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கார்பரேட் தொழிற் செய்திகள் படிக்கக் கூடியவர்கள் அறிவர். இந்த அதானிக் குடும்பத்திற்கு தான் நமது பிரதமர் மோடி அவர்கள், குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது, கட்ச் பகுதியிலிருந்த விளைச்சல் நிலங்களை தாரை வார்த்தார்.

எப்படித் தெரியுமா?.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பாகிஸ்தானின் எல்லையோரப் பகுதியான குஜராத்தின் கட்ச் பகுதியின் பாதுகாப்புக் கருதி பண்டிட் ஜவஹர்லால் நேரு பஞ்சாபிலிருந்த சீக்கியர்களை கட்ச் பகுதியில் குடியமர்த்தி, அவர்களுக்கு வாழ்வாதரத்திற்காக அங்குள்ள நிலங்களை இலவசமாக இந்திய அரசு கொடுத்தது. அதை அந்த மக்கள் பன்படுத்தி விளைச்சல் நிலமாக மாற்றி 1947 லிருந்து அனுபவித்து வந்தனர். அந்த நிலங்களைத் தான் தேச பக்தர் நரேந்திர மோடி அவர்கள், அவர்களிடமிருந்து பிடுங்கி விரட்டி விட்டு அதானி குடும்பத்திற்கு மிகச் சொற்பமான விலைக்கு கொடுத்துள்ளார். அங்கு தற்பொழுது 10,000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின்சார தயாரிப்பு நிலையத்தை அதானி குழுமம் நிறுவி வருகிறது.

பாகிஸ்தானின் எல்லையில் உள்ள இந்த நிறுவனம், தற்பொழுது குறி வைத்திருக்கும் வியாபாரக் களம் அண்டை நாடான பாகிஸ்தான். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, பாகிஸ்தான் தனது மின்சார தயாரிப்பு நிறுவனங்களை விற்க இருக்கிறது என்கிற செய்தி அதானி குழுமத்தின் காதுகளில் எட்டியது தான் தாமதம். கோடிக் கணக்கில் பணம் கொட்டும் வழியறிந்தவர்கள். இந்திய தேர்தல் சந்தையை, தனது இலாபத்தை நோக்கிய பயணத்திற்கு பகடையாக பயன்படுத்தியது. அதற்கு அவர்களுக்கு கிடைத்த மிக நெருங்கிய நண்பர் மோடி அவர்களும் அவர் சார்ந்த பிஜேபி அமைப்பும் துணை போனது. பணம் இந்திய தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விளையாண்டது. அவர்களின் துருப்புச் சீட்டான மோடி வெற்றி பெற்றார். பிரதமரானார். செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் வண்ணம் நவாஸ் ஷரீஃப் அழைக்கப்பட்டுள்ளார். அதானி குழுமம் மிக விரைவில் பாகிஸ்தானோடு மின்சார விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடியின் ஆசியுடன், அதை இந்திய தேச பக்தர்கள் கண்டு மகிழலாம்.

அம்பானி
_________

பாகிஸ்தான் அதன் மாநில அரசுகளின் பொறுப்பிலுள்ள 35 சதவீத எண்ணெய் நிறுவனங்களை விற்க உள்ளது. இந்திய எண்ணெய் உலகத்தின் ஜாம்பாவான்களான அம்பானி குழுமம், இந்த வாய்ப்பை நழுவ விடுமா என்ன?. ஆகையால் தான், அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியுடன் மிக நெருக்கமாக உள்ள மோடி வெற்றி பெற்றவுடன் செய்த முதல் வேலை நவாஸ் ஷரீஃபை அழைத்தது. பாகிஸ்தானின் வாசல்கள் இந்திய கார்பரேட் நிறுவனங்களுக்கு திறப்பதற்கான திறவு கோல் மோடி அவர்கள் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார்.

டாடா நிறுவனம்
________________

டாடா என்றாலே ஸ்டீல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாகிஸ்தானின் ஸ்டீல் மில்ஸ்களும் விற்பனைக்கு வருகிறது. 2013, ஜனவரி 11 முதல் 13 வரை குஜராத்தில் மோடி தலைமையில் “த குளோபல் பிஸ்னஸ் ஹப்” என்கிற பெயரில் மிகப் பெரிய இந்தியத் தொழிலதிபர்களின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் ரத்தன் டாடா,அதானி குழுமம், அம்பானி சகோதரர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சன் குழுமத்தின் மாறன்.
ஒரு வேளை அங்கு தான் இந்திய தேர்தலின் வியூகம் மற்றும் அனைத்தும் திட்டம் தீட்டப்பட்டிருக்குமோ என சந்தேகிக்க வைக்கிறது.

சன் குழுமம்
____________

சன் குழுமத்தின் கலாநிதி மாறனும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். ஸ்பைஸ் ஜெட் விமானத்தை வாங்கியிருக்கும் சன் குழுமம் ஒரு வேளை பாகிஸ்தான் இண்டர் நேசனல் ஏர்லைன்சின் பக்கமும் கால் பதிக்க நினைக்கிறதோ?!. தங்களின் சன் டிவியில் கூட மோடியின் தேர்தல் விளம்பரத்தை போட்டு தங்கள் விசுவாசத்தைக் காட்டியது இதனால் தானோ?!.

இந்தியாவின் தேச பக்தி எனச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்ட பிஜேபி மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இது காலம் வரை பாகிஸ்தானை ஜென்ம எதிரியாகப் பாவித்த காலம் போய், தங்களுக்கு தேர்தலிலே கோடி கோடியாக பணத்தை வாரி இரைத்த கார்பரேட் தொழில் அதிபர்களுக்காக தங்களின் கொள்கையையே மாற்றிக் கொண்டு செயல்படுவதற்கு வைத்திருக்கும் பெயர் தான் அண்டை நாடுகளோடு நட்புறவு. அதற்காக போட்ட கபட நாடகம் தான் சார்க் நாடுகள் வரவேற்பு மற்றும் விருந்து.

அந்நிய நாட்டின் வியாபாரத்தைப் பெற்றுக் கொடுக்கவே இவ்வளவு முனைப்பு என்றால், சொந்த நாட்டில் என்ன என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?!

வாழ்க உங்கள் தேச பக்தி!

Posted by tamilnadu on 11:29 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் ஏன் அழைக்கப்பட்டார்- யாருக்காக!"

Leave a reply