ராஜபக்சே இந்திய வருகையும் வைகோவும்!

ராஜபக்சே இந்திய வருகையும் வைகோவும்!
ராஜபக்சே இந்திய வருகையும் வைகோவும்!

பிரிவு: அரசியல்
பதிந்த நேரம்: Thursday, 22 May 2014 10:52
பதிவர்: அருள்தாஸ்

நாட்டின் 16 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, வரும் மே 26 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கப்போகும் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை அதிபர் ராஜபக்சே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேக்குத் தமிழகத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைய அது மிக முக்கியக் காரணம் என்பது நாடறிந்த உண்மை. தமிழக சட்டமன்றத்திலேயே ராஜபக்சேக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த வகையில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கடுமையான மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் முதலான வாழ்வாதார பிரச்சனைகள் தம்மை அழுத்தும் நிலையிலும் தமிழக மக்கள் கடந்த தேர்தலில் அபார வெற்றியினை அளித்துள்ளனர். அந்த அளவுக்குத் தமிழக மக்களிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே மீது கடுமையான வெறுப்பு உள்ளது.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா வர இருப்பதாக ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதும் தமிழகத்தில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்த ம.தி.மு.கவின் வை.கோபாலசாமி கடுமையான அதிருப்தியில் உள்ளார். அறிவித்தபடியே பிரதமர் பதவியேற்புவிழாவில் ராஜபக்சே கலந்துகொண்டால் அரசியலைவிட்டே விலகி விடுவேன் என வைகோ தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.
ராஜபக்சே இந்திய வருகையினைத் தடுக்க வேண்டுமெனகோரி வைகோ பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் மோடிக்கும் கோரிக்கை விடுத்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அந்தக் கோரிக்கையில், "சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடியையும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருக்கும்போது கடந்த 2013 ஆம் ஆண்டும் ராஜபக்சே இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் இதேபோன்று வைகோவிடமிருந்து எதிர்ப்பு வந்திருந்தது. ஆனால் அந்த எதிர்ப்பு இவ்வாறு இருகரம் கூப்பி வேண்டுதலாக இல்லாமல் வேறு விதமாக இருந்தது.
கடந்த ஜனவரி 31, 2013 ல் வைகோ வெளியிட்டிருந்த அறிக்கை கீழ்கண்டவாறு இருந்தது:
"உலக வரலாற்றில் கொடிய இனவெறித் தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத, ராஜபக்சே அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை ஆகும். நெஞ்சைப் பிளக்கும் ஈழத்தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம், இப்பொழுதுதான் மெல்லமெல்ல உலகத்தின் மனசாட்சியைத் தட்டத் தொடங்கி இருக்கின்றது.

செப்டெம்பர் 21-ம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் நடத்திய அறப்போரின்போது, இனிமேல் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு ராஜபக்சே வந்தாலும், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் முற்றுகையிடும் அறப்போராட்டத்தை நடத்தும் என்று அறிவித்தேன்.

எனவே, ராஜபக்சே இந்தியாவுக்குள் வருவதை எதிர்த்து, பிப்ரவரி 8-ம் நாள் அன்று, இந்திய அரசை எதிர்த்து, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம், எனது தலைமையில் நடைபெறும்."
முன்னர் வீரியமாக பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் நிலையில் இருந்த வைகோவின் ஈழத்தமிழர் பாசம், பாஜகவுடன் இணைந்த பின்னர் இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுப்பதாக மாறிய அவலத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!
கொள்கை, சித்தாந்தம், தனித்துவம் என அனைத்தையும் மறந்து கேவலப்பட்டு நிற்பது வைகோவுக்கு இது புதிதொன்றும் இல்லை. பல்லாயிரம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை எதிர்க்கும் வைகோ, இங்கே தம் தாய்நாட்டில் பல ஆயிரம் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த நரேந்திரமோடியுடன் கொஞ்சி குலாவி கூட்டணி வைத்தபோதே அவரின் மனிதாபிமானம், ஈழத்தமிழர் பாசம் எல்லாம் பல்லிளித்துவிட்டது. இதோ இப்போது, ஒரு இனப்படுக்கொலை வீரனின் பதவியேற்புவிழாவில் இன்னொரு இனப்படுகொலை வீரனின் பவனி! அதனைக் கேட்டும் சுரணை வராமல் இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கும் அளவுக்குத் தைரியத்தை அடகுவைத்துவிட்ட வைகோ, இனியும் ஈழத்தமிழர்களின் பிணத்தின்மீது பிழைப்புவாதம் நடத்துவதைத் தொடர்வதில் அர்த்தமில்லை! இதனைவிட மெரினா பீச்சில் சட்டை விரித்திருந்து பிச்சை எடுப்பது மேலானது!
அருள்தாஸ்
Source : http://www.inneram.com


Posted by tamilnadu on 12:02 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "ராஜபக்சே இந்திய வருகையும் வைகோவும்!"

Leave a reply