இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!

இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகே ஹோட்டல் வைத்திருக்கும் இந்த தம்பதி... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் என்று பலருக்கும் தினம்தோறும் இலவசமாகவே உணவைத் தந்துவருகிறார்கள். இதுமட்டுமா... குறைவான வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு... பாதி விலைதான்!


தம்பதியிடம் பேச்சு கொடுத்தால்... வார்த்தைக்கு வார்த்தை பொங்கி வழிகிறது நேசம்!

''30 வருஷத்துக்கு முன்ன 'ஹோட்டல் ஏலகிரி’ங்கற பேர்ல இந்த சைவ உணவகத்தை இங்க ஆரம்பிச்சோம். ஜோலார்பேட்டை பெரிய ரயில்வே ஜங்ஷனா இருக்கறதால... வெவ்வேறு ஊர்கள்ல இருந்தும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள்னு பராமரிக்க முடியாத நிலையில இருக்கறவங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டுட்டுப் போயிடுவாங்க. இப்படி வர்றவங்கெல்லாம் சாப்பாட்டுக்காக அலையற அலைச்சல்... கொடுமையிலும் கொடுமை! அதேபோல, ஹோட்டலுக்கு வந்துட்டாலும்... பண வசதி இல்லாத பலரும் அரை வயிறு, கால் வயிறுனு சாப்பிட்டுட்டு எழுந்து போறதைப் பார்க்கறப்ப வருத்தமா இருக்கும். இதெல்லாம் எங்களை ரொம்ப நாளா உறுத்திட்டே இருக்கவே... மனசுக்குள்ள ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். காலை 8 மணி முதல் 11 மணி வரை முதியவர்கள் 100 பேருக்கு இலவச உணவு, அதிக வருமானம் இல்லாத துப்புரவுத் தொழிலாளர்கள், கோயில் பூசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் இவங்களுக்கெல்லாம் பாதி விலையில் உணவுனு முடிவு பண்ணி, உடனடியா செயல்படுத்தவும் ஆரம்பிச்சோம். அதேபோல, சீருடை, புத்தகப்பையோட வர்ற மாணவர்களுக்கும் பாதி விலையிலயே கொடுத்தோம். இவங்கள்லாம் வயிறார சாப்பிட்டு எழுந்து போறத பார்க்கும்போதே... மனசுக்கு சந்தோஷமா இருக்கும்'' என்று சொல்லும் சுஜாதா தம்பதி, தினமும் குறைந்தது 20 - 30 மாணவர்களுக்கு பேனா அல்லது பென்சில்... ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பால் என்று வழங்கிவருகிறார்கள்.

''பொதுவா, மனநிலை பாதிக்கப்பட்டவங்க... பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடைகளைக் கடந்து போறப்ப... நிக்க மாட்டாங்க. ஆனா, டீக்கடை, ஹோட்டல்னு பார்த்துட்டா... நின்னுடுவாங்க. சுயநினைவு இல்லைனாலும், சாப்பாட்டோட தேவை அவங்களுக்கு நல்லாவே தெரியுறதுதான் காரணம். ஆனா, அதை பூர்த்தி செய்துக்கற வழிதான் தெரியாது. அதனால, தினமும் காலையில சாப்பாட்டை பார்சல் பண்ணி எடுத்துட்டு போய், ரயில்வே ஜங்ஷனுக்குள்ள இப்படிப்பட்ட ஆளுங்கள தேடித்தேடி கொடுத்துவிட்டு வருவேன்'' என்று நாகராஜ் சொன்னபோது, வியப்பில் விழிகள் அசையவில்லை நமக்கு.

''சொந்த ஊர் ஏலகிரி மலை. சிறு வயதிலிருந்தே ஹோட்டல்ல வேலை செய்துட்டிருந்த அனுபவத்துலதான் இந்த ஹோட்டலையே ஆரம்பிச்சேன். எங்களுக்கு மூணு குழந்தைங்க... ஸ்கூல்ல எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறாங்க. இதுவரைக்கும் எங்களுக்குனு சொந்த வீடு இல்லை, வங்கியில் எந்த சேமிப்பும் இல்லை. சுஜாதாவோட காதுல கால் சவரன் நகையும், மூக்குத்தியும்தான் போட்டிருக்காங்க. இதை எல்லாம் பார்த்து... உறவுக்காரங்க, ஊர்க்காரங்க பலரும் 'ஏமாளி’, 'பொழைக்கத் தெரியாதவங்க’னு சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் காது கொடுக்கவே மாட்டோம். பணத்தை சேர்க்கறதுல கிடைக்குற சந்தோஷத்தைவிட, பலரை பசியாத்துறதுல உள்ள ஆத்ம திருப்தி... அவங்களுக்கெல்லாம் தெரியாதே'' என்ற நாகராஜ்,

''சுஜாதா எனக்கு மனைவியா வாய்ச்சது... என்னோட வரம். அவங்களும் எல்லாரையும்போல இருந்திருந்தா... எனக்கு இது சாத்தியமாகியிருக்காது. என் அலைவரிசையிலயே அவங்களும் இருக்கறதாலதான்... 25 வருஷமா என்னால இந்தப் பயணத்தைத் தொடர முடியுது'' என்று நிறுத்த, புன்னகையுடன் தொடர்ந்தார் சுஜாதா.

''இந்தத் தொழில்ல வர்ற லாபத்துல தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை சேவைக்காக செலவு செய்றோம். எங்ககிட்ட இப்போ 15 பேர் வேலை செய்றாங்க. அவங்களுக்கெல்லாம் சம்பளம் போக, தினமும் 4,000 ரூபாய் வரும். இதுல சலுகைகள், இலவசங்கள்னு செலவழிச்சது போக... 750 ரூபாய் மிச்சமாகும். இது எங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருக்கு. இந்த 750 ரூபாயையும்கூட ஓட்டல்ல இருந்து எடுக்கக்கூடாது... ஏதாச்சும் வேலைக்கு போகணும்'னு தீர்மானிச்சுருக்கேன். அதனால, வி.ஏ.ஓ தேர்வுக்குப் படிச்சுட்டிருக்கேன். எனக்கு வேலை கிடைச்சுட்டா... என் சம்பளமே குடும்பச் செலவைப் பார்த்துக்க போதுமானதா இருக்குமே. அதுக்குப் பிறகு, இந்த ஹோட்டலை முழுக்க முழுக்க சேவைக்காகவே நடத்த ஆரம்பிச்சுடுவோம்'' என்ற சுஜாதா, கையில் அட்சயபாத்திரத்துடன் நிற்பது போலிருந்தது நம் கண்களுக்கு!

''இப்படி நாங்க சேவை செய்றது தெரிஞ்சு, நாங்களும் உதவி செய்றோம்னு பலரும் வர்றாங்க. ஆனா, எங்க சொந்த உழைப்பால மட்டுமே இதை செய்யணும்னு நினைக்கிறோம். அதனால, அப்படி வந்த உதவிகளையெல்லாம் அன்போட மறுத்துட்டோம். எங்களால முடிஞ்சவரை தொடர்வோம். அதுக்கான உடல் பலத்தையும், ஆரோக்கியமான மனதையும் மட்டும் ஆண்டவன் கொடுத்தா போதும்!'' என்று வைராக்கியத்தோடு நாகராஜ் சொல்ல, தலையசைத்து ஆமோதிக்கிறார் சுஜாதா!

''தினமும் வயிறு நிறையுதுக்கா!''

அருகிலேயே ரயில்வே ஜங்ஷன் இருப்பதால்... ஆட்டோ டிரைவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என்று காலை ஐந்து மணி முதலே பரபரப்புதான். சவாரியை முடித்துவிட்டு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட உட்கார்ந்திருந்த ஆட்டோ டிரைவர் சங்கரிடம் பேச்சுக் கொடுத்தபோது... ''காலையில சவாரிக்கு போனா... அது முடியறதுக்கு பத்தரை ஆகிடும். அதுவரைக்கும் சாப்பிட முடியாது. சவாரி முடிச்சுட்டு வர்றப்ப காலை சாப்பாடு பல ஹோட்டல்கள்ல தீர்ந்துருக்கும். அப்படியே கிடைச்சாலும் ரேட் அதிகமா இருக்கும். ஆனா, இங்க வந்தா... கட்டாயம் வயிறார சாப்பிடலாம். மத்த ஹோட்டல்ல நாற்பது ரூபாய்க்கு சாப்பிடுற சாப்பாட்டை... அதே தரம் மாறாம இங்க இருபது ரூபாய்க்கு எங்களுக்காக கொடுப்பாரு நாகராஜ் அண்ணன். கையில காசில்லன்னாகூட... சாப்பாடு போட்டுதான் அனுப்புவார்'' என்றார் பெருமிதத்துடன்!

Posted by tamilnadu on 1:02 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!"

Leave a reply