ராஜ்யசபாவில் மோடி ஆட்சிக்கு காத்திருக்கும் சிக்கல்!



ராஜ்யசபாவில் மோடி ஆட்சிக்கு காத்திருக்கும் சிக்கல்!

” லோக்சபாவில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக்கு போதுமான பலம் உள்ள நிலையில், ராஜ்யசபாவின் மொத்த, எம்.பி.,க்கள் பலத்தில், பாதியளவு கூட, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இல்லை. 

ராஜ்யசபாவின் மொத்த, எம்பி.,க் களின் எண்ணிக்கை, 250. இதில், இப்போதைய நிலையில், பா.ஜ.,வுக்கு, 46 எம்.பி.,க்களும், காங்கிரசுக்கு, 68 எம்.பி.,க்களும் உள்ளனர். காங்கிரஸ் தான், ராஜ்யசபாவில், அதிக, எம்பி.,க்களை கொண்டுள்ள கட்சி.லோக்சபாவில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி, அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாகும். அந்த வகையில், லோக்சபாவில் எளிதில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ராஜ்யசபாவில் தடுமாற்றத்தை சந்திக்கும். ஏனெனில், அந்த சபையில், காங்கிரஸ் வசம் தான் அதிக, எம்.பி.,க்கள் உள்ளனர். அந்த கட்சி, பா.ஜ., அரசின் மசோதாக்களை முடக்க வாய்ப்பு உள்ளது. எனினும், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற நினைக்கும் பா.ஜ., அரசு, அந்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறாது என நினைத்தால், பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தை கூட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பி.,க்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில், மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கலாம்.

தற்போதைய நிலையில், ராஜ்யசபாவில், 245 எம்.பி.,க்கள் உள்ளனர். மசோதாக்கள் நிறைவேற்ற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு வேண்டும். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின், எம்.பி.,க்களை சேர்த்தாலும் பலம், 65 ஆகத் தான் இருக்கும். இதில் இன்னொரு சிக்கலாக, இப்போதைக்கு ராஜ்யசபா தேர்தல் இல்லை. 2016ல் தான், மூன்றில் ஒரு பகுதி, ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இன்னும் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக, மோடி தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு, ராஜ்யசபாவில் சிக்கல் தான். எனவே, ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற, தமிழகத்தின், அ.தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தின், 


மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை, பா.ஜ., பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் இருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், ராஜ்யசபாவில், தனிப்பெரும்பான்மை இருக்கவில்லை. அந்த கூட்டணிக்கு, 102 எம்.பி.,க்கள் ஆதரவு தான் இருந்தது. அதனால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, பா.ஜ.,வின் ஆதரவை, காங்கிரஸ் கூட்டணி அரசு பெற்று வந்தது. அது போலவே, இந்த முறையும், முக்கிய மசோதாக்களை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற, காங்கிரசின் ஆதரவு, மோடி அரசுக்கு தேவைப்படும். அதனால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு, சர்ச்சைக்குரிய சட்டங்களை, மோடி அரசால் நிறைவேற்ற முடியாது.

கூட்டு கூட்டத்திலும் சாத்தியமில்லை:


பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட, ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியம். இன்னும் மூன்றாண்டுகளுக்கு, பிரணாப் முகர்ஜி தான் ஜனாதிபதி. கூட்டுக்கூட்டம் கூட்டப்படும் போது, அதன் பலம், லோக்சபாவின், 545 மற்றும் ராஜ்யசபாவின் 245 எம்.பி.,க்கள் சேர்த்து, 790 ஆக இருக்கும். இருசபைகளின் கூட்டு கூட்டத்தில், மசோதாக்களை நிறைவேற்ற, 396 எம்.பி.,க்கள் ஆதரவு வேண்டும். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மொத்த பலம், 335 தான். இன்னும், 61 எம்.பி.,க்களின் ஆதரவு இருந்தால் தான், கூட்டுக்கூட்டத்திலும், மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலை காணப்படுகிறது.

Posted by tamilnadu on 7:57 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "ராஜ்யசபாவில் மோடி ஆட்சிக்கு காத்திருக்கும் சிக்கல்!"

Leave a reply