காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 வது சட்டபிரிவு சரியா ? தவறா ?


காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 வது சட்டபிரிவு சரியா ? தவறா ?

காஸ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை தரும் அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்வோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வழமை போல் தெரிவித்துள்ளது.சர்வதிகாரி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள இச்சூழலில் இது குறித்தான விவாதம் அதிகரித்துள்ளது.அதென்ன காச்மீருக்கும் மட்டும் சிறப்பு அந்தஸ்து ? என்று படித்தவர்கள் கூட கேள்வி எழுப்புகிறார்கள் .குர்த்டு தேச பக்தி எனும் வெறியூட்டப்பட்ட நாமும் அதன் மூலகாரணங்கள் என்ன ? என்பதை சிந்திக்க கூட முற்படுவதில்லை.வரலாறு என்னவென்பதையும் அறியாமல்,சட்டமும் புரியாமல் ,உண்மையை ஆராய கூட மனமின்றி குருட்டு தேசபக்தி வெறி கொண்டு அலைகிறோம்.சிறப்பு அந்தஸ்தை பற்றி கேட்டால் காஷ்மீரில் பிறமாநிலத்தவர் இடம் வாங்க முடியாது என்கிறார்கள். உண்மைதான் .ஆனால் காஸ்மீருக்கு மட்டுமா இந்த சலுகை என்றால் நிச்சயம் இல்லை. இன்னொரு மாநிலத்திற்கும் இச்சலுகை உண்டு .அம்மாநிலத்தை பாஜக தான் ஆள்கிறது.அம்மாநிலம் கோவா.காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைத்தது 1947 இல்.ஆனால் 12.12.1961இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட கோவாவிலும் அம்மாநிலத்தவரை தவிர பிறர் நிலம் வாங்க முடியாது.காஷ்மீரை பற்றி வாய்கிழிய பேசுவோர் கோவாவை பற்றி மௌனம் கொள்வது ஏன்?

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் 

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.இவைதான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் .இதை பற்றி பேசுவோர் உலகின் மிகபெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக காஷ்மீர் இருப்பதை பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.ஆம் அங்கே 6 பேருக்கு 1 ராணுவ வீரன்.இலங்கையில் அமைதிப்படை என்றபெயரில் இந்தியராணுவம் நிகழ்த்திய அத்துனை கொடுரங்களும் காஷ்மீரில் அன்றாடம் நடக்கிறது.ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்தாலும் தேசபக்தி என்ற பெயரால் மூடி மறைக்கபடுகிறது .காஷ்மீரிகளை சூட்டு கொன்று விட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பட்டம் கட்டி விருது வாங்கி கொண்ட கொடுமையும் நடந்து பின்னர் அது வெளிவந்தது. இந்திய எல்லைகள் பல இருக்க காஷ்மீரில் மட்டும் தான் மிக அதிகமான ராணுவம் நிலைகொண்டுள்ளது ,அப்படி இருக்கும்போது எப்படி எல்லைதாண்டி பயங்கரவாதிகள் வருகிறார்கள் ?அப்படியெனில் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் என்ன செய்கிறார்கள் ?அவர்களை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்பதுமில்லை .கேட்டால் தேசதுரோகி பட்டம் கட்டப்படும் என்ற அச்சம் தான்.இனி வரலாறை பார்ப்போம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம் அல்லது பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.

பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அதுதான் காஷ்மீர்.

காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தம் என்று வசனம் பேசும் தமிழ்படங்களும் இந்திப்படங்களும் நிறைய காசுப்பார்த்து விட்டன. ஆனால் நமது முதல்பிரதமர் நேரு அப்படிச் சொல்லவில்லை.

ஒரு நெடுங்கதை சீக்கிய மன்னன் ஹரிசிங்கிடம் விசுவாசம் காட்டி ஜம்மு பகுதியைப் பரிசாகப் பெற்றான் குலாப்சிங். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இவன் ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் இடையில் மூண்ட போரில் ஆங்கிலேயேருக்கு உதவினான். 

அதாவது அன்றைய கருணா பலனாக ஆங்கிலேயர் காஷ்மீரை அவனிடம் கையளித்தார்கள். இந்து மன்னனான இவன் 87 சதவீதம் முஸ்லீம் மக்களின் ஆட்சியாளராக முடிசூடிக் கொண்டான். அதாவது காஷ்மீர் மக்களால் எவ்விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தான் தோன்றித் தனமான மன்னராட்சி. இதன் வாரிசுதான் மன்னன் ஹரிசிங்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளோடும் இணைவதில்லை என்ற நிலை எடுத்தான் மன்னன் ஹரிசிங். மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து பூஞ்ச் (ஜம்மு) பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்கான் தலைமையில் ஆயுத எழுச்சி நடத்தப்பட்டது. இவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.

இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து சுமார் 3000 பழங்குடியினர் படையெடுத்து வந்தனர். அவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.. மன்னர் இந்திய அரசிடம் ஓடினான். இந்தியராணுவம் அவர்களை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் மூண்டது. 1949 ஜன 1-ல் போர் முடிவுற்றது. இரு ஒப்பந்தங்களுக்கு அந்தப்போர் வழிவகுத்தது.

மன்னன் ஹரிசிங் - பாகிஸ்தான் இடையே 1948 டிச -31ல் அசையாநிலை ஒப்பந்தமும், மன்னனுக்கும் இந்தியாவுக்கும் இணைப்புக்கான ஒப்பந்தமும் போடப்பட்டன.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (ஆஸாதி காஷ்மீர் எனப்படுவது) என்றது. ஜம்மு – காஷ்மீர் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் சொன்னது. இருவர் சொன்னதும் உண்மைதான்.

இந்தியாவுக்கும் மன்னனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சொல்வதென்ன?

1. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு சம்மந்தமான அதிகாரங்கள் மட்டுமே இந்தியாவுக்குரியது மற்ற அதிகாரங்கள் காஷ்மீருக்கு உரியது.

இதன்படி அரசியல் சட்டம் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உரிமைகள் கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.

2. ஜம்மு – காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்துவது. இதனை ஐ.நா. அவை மேற்பார்வை செய்யும் காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடன் இணைக்கப்படும்.

இந்த இரு கூறுகளையும் நமது முதல் பிரதமர் நேரு வானொலியில் அறிவித்தார். இதை ஐ.நா. அவைக்கும் எடுத்துச் சென்றார். ஐ.நா. அவை இதை ஏற்று இந்தியா பாகிஸ்தான் ஐ.நா. ஆணையம் ஒன்றை அமைத்தது.

இந்நிலையில் காஷ்மீர் தேசிய இன உரிமையை முன்னிறுத்திப் போராடிய அப்துல்லா 1948, மார்ச் 17 பிரதமராக பதவியேற்கிறார். காஷ்மீருக்கு தனிப் பாராளுமன்றம் அமைக்கப்படுகிறது. இளவரசர் கரண்சிங் காஷ்மீரின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசோடு நட்பான ஒரு சுயாட்சிக் குடியரசின் ஆட்சி மலர்ந்தது.

இந்திய அரசின் துரோகப் பட்டியல் :-

1. இன்றுவரை பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

2. 1949, அக்-17ல் உருவான அசியல் சாசனப்பிரிவு 370ன் கீழான உரிமைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டன.

3. ஆக, 8 1953ல் பிரதமர் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்மீது காஷ்மீர் சதி வழக்கு போடப்பட்டது.

4. அக் 30 1956ல் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த பகுதி என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

5. காஷ்மீர் அரசிடம் அதுவரை இருந்த மாநில உள் விவகாரங்கள் அனைத்திலும் சட்டமியற்றும் அதிகாரத்தை இந்திய அரசு எடுத்துக்கொண்டது.

பின் 1961ல் இந்தியா – பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை வெறும் எல்லைத் தகரான சிக்கலாகக் குறுக்கப்பட்டது. 1987க்கு பிறகு வெடித்த ஆயுதந்தாங்கிய காஷ்மீர் விடுதலைப் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. தீவிரவாதம், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு தேசிய இனப் பிரச்சனை முற்றாக திசை திருப்பப்பட்டது.

இந்தியாவுடனான இணைப்புக்கு ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டப் பிரிவு 370 தான் அடிப்படை. இந்த சட்டப் பிரிவின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் சொத்துகளை வாங்கவோ, குடியேறவோ முடியாது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், சொத்துரிமை பெறவும் முடியும் எனும்போது, அங்கே இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் குடியேற முடியாது என்பது எப்படி சரி என்பதுதான் 370-ஆவது சட்டப் பிரிவை அகற்றக் கோருபவர்களின் வாதம்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதா இல்லை தனி நாடாகத் திகழ்வதா என்கிற கேள்வி 1947 பிரிவினையின்போது எழுந்தபோது, ஜம்மு காஷ்மீருக்கு சட்டப் பிரிவு 370-இன் மூலம் தனி அந்தஸ்து தரப்படும் என்கிற வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்திய யூனியனில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இந்தியாவுடன் இணைவதன் மூலம், இந்தியாவின் பிற பகுதியினர் பெருவாரியாகக் குடியேறினால், "காஷ்மீரியத்' என்கிற தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற நியாயமான பயம்தான் அவர்கள் இப்படியொரு தனி அந்தஸ்து கோருவதற்கு அடிப்படைக் காரணம்.

வட இலங்கையில் ராஜபட்ச அரசு சிங்களர்களைக் குடியேற்றுவதை நாம் எதிர்க்கிறோம். ஏன்? அங்கே தமிழினம் அழிக்கப்படுவதற்கும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் அது வழிகோலும் என்பதால்தான். அதேபோல, இந்தியாவின் பிற பகுதியினர் இங்கே குடியேறாதீர்கள் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பிற பகுதியினரின் குடியேற்றத்தால் தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற அச்சத்தில் இருக்கும் நியாயத்தை சிந்திக்க வேண்டும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ அகற்றுவதற்கு காஷ்மீர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களது உரிமை பறி போகிறது; கலாசாரம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதால் எதிர்க்கிறார்கள்.

சட்டப் பிரிவு 370 அகற்றப்படுவதால் சராசரி இந்தியர் யாரும் பயனடையப் போவதில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குங்குமப்பூ வயல்களையும், ஆப்பிள் தோட்டங்களையும் வாங்கத் துடிக்கும் பணக்காரர்களும், நிறுவனங்களும்தான் பயனடையப் போகிறார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறையாக தேர்தல் நடத்தப்பட்டபோதெல்லாம், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்து வரும் காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் இதுவரை எந்தவொரு ஆட்சியும் பூர்த்தி செய்யவில்லை.என்பதுதான் மிகபெரும் வேதனை
 

நன்றி :
இனியவன் தமிழன்

Posted by tamilnadu on 6:36 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

1 comments for "காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 வது சட்டபிரிவு சரியா ? தவறா ?"

Leave a reply