உலக நாடுகளுக்கு முன்னோடியானது சீனா – கடல்வழி பட்டுப்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது
தென்கிழக்காசியாவையும் இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளையும் துறைமுகங்கள் மற்றும் கடல்வழி இணைப்பை ஏற்படுத்தும், சீனாவின் இலட்சியமான கடல்வழி பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்னோடியாக 1.6 பில்லியன் டொலர் நிதியத்தை சீனா நேற்று உருவாக்கியுள்ளது.
இந்த 1.6 பில்லியன் டொலர் நிதியம், பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் உள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
பட்டுப்பாதைத் திட்டத்தின் மூன்று முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றான, சீனாவின் கரையோர பியூஜியன் மாகாணத்தில் இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாக இந்த கடல் பட்டுப்பாதை திட்டம் அமையவுள்ளது.
சீனாவையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும் இணைத்த பழங்கால பட்டுப்பாதையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள தென்கிழக்காசிய நாடுகளையும் தனது கரையோரப் பகுதிகளுடன் இணைக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்குவதிலும் சீனா ஆர்வம் கொண்டுள்ளது.
சீனா ஏற்கனவே துறைமுக கட்டுமானங்களில் ஈடுபட்டுள்ள, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், ஆகிய நாடுகளில் இந்த உட்கட்டுமான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும் இந்த திட்டம் தொடர்பாக இந்த மாத முற்பகுதியில், சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட வரைபடத்தில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகம் இடம்பெறவில்லை.
நெருக்கமான வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த சீனா விரும்பும் துறைமுகங்களாக, கொல்கத்தாவும், கொழும்பும் குறிப்பிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments for "உலக நாடுகளுக்கு முன்னோடியானது சீனா – கடல்வழி பட்டுப்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது"