லிபியாவில் #Libya, சி.ஐ.ஏ. அனுசரணையுடன் ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளது?



லிபியாவில் #Libya, சி.ஐ.ஏ. அனுசரணையுடன் ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளது? சில தினங்களுக்கு முன்னர், பெங்காசி நகரின் மீது, "லிபிய தேசிய இராணுவம்" தாக்குதல் நடத்தியது. பெங்காசி நகரில் ஆதிக்கம் செலுத்தும், இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுக்களை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் என்று அறிவிக்கப் பட்டது. 

பெருந்தொகை படையினர், விமானத் தாக்குதல்கள் என்று, ஒரு மரபுவழி இராணுவம் நடவடிக்கை எடுப்பதைப் போன்று, அந்த இராணுவ தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனால், "லிபிய தேசிய இராணுவம் என்பது, லிபிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம் அல்ல, அதுவும் ஒரு ஆயுதக் குழு தான்" என்று, லிபிய அரசு அறிவித்தது. இது நடந்து சில நாட்களில், திரிபோலி நகரில் லிபிய பாராளுமன்றம் சுற்றிவளைக்கப் பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். அந்த சம்பவங்கள் யாவும், லிபியாவில் ஒரு சதிப்புரட்சி நடந்திருப்பதைக் காட்டுகின்றன.

யார் அந்த சதிப்புரட்சியாளர்கள்? ஜெனரல் கலிபா ஹிப்தர் தலைமை தாங்கும் ஆயுதக்குழு தான், "தேசிய இராணுவம்" என்ற பெயரில், பெங்காசி மீது படையெடுத்திருந்தது. ஹிப்தர், முன்பு கடாபியின் அரசில் பணியாற்றியவர். எண்பதுகளில் நடந்த, லிபிய - சாட் எல்லைப் போரில் பங்குபற்றியவர். அன்று நடந்த போரில், ஹிப்தரும், 6௦௦ லிபியப் படையினரும், சாட் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்டனர்.

சாட் நாட்டில் அன்றிருந்த அரசாங்கத்தை, அமெரிக்காவும், பிரான்சும் ஆதரித்து வந்தன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, ஹிப்தரும், 350 லிபிய படையினரும் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களைக் கொண்டு, "லிபிய தேசிய மீட்பு முன்னணி" (National Front for the Salvation of Libya) என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. சாட் நாட்டில் நடந்த ஆட்சி மாற்றம் காரணமாக, அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று விட்டனர். சி.ஐ.ஏ. தலைமையகத்திற்கு பக்கத்தில் தான், ஹிப்தரின் குடியிருப்பும் இருந்தது.

2011 வரையில், ஹிப்தர் எந்த அரசியல்-இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. கடாபி அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போர் தொடங்கியதும், ஹிப்தர் தலைமையிலான ஆயுதக் குழுவும் லிபியாவில் குதித்தது. லிபியாவில் கடாபி ஆட்சி கவிழ்க்கப் பட்டாலும், எதிராளிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கவில்லை. பல நூறு ஆயுதக் குழுக்கள், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதனால், பல வருடங்களாக, லிபியாவில் ஸ்திரமான ஆட்சி ஏற்படவில்லை.

தற்போது, லிபியாவில் மீண்டும் ஒரு சர்வாதிகாரியை கொண்டு வருவதற்கு சி.ஐ.ஏ. முயற்சிப்பதாகத் தெரிகின்றது. சி.ஐ.ஏ. தான், ஹிப்தர் குழுவை பின்னால் இருந்து இயக்குவதாக பலர் நம்புகின்றனர். இந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், லிபியாவுக்கு அண்மையில், தென் இத்தாலியில் உள்ள, சிசிலி தீவில் 200 அமெரிக்கப் படையினர் வந்திறங்கினார்கள். லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தை பாதுகாப்பதற்காக தருவிக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.

Posted by tamilnadu on 1:40 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "லிபியாவில் #Libya, சி.ஐ.ஏ. அனுசரணையுடன் ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளது? "

Leave a reply