வல்லபாய் பட்டேல் ஏன் RSS இயக்கத்தை தடை செய்தார்?


அக் 24/2013: நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபபாய் படேலுக்குக் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கம் கொடுத்த வாக்குறுதியை அளித்தது.   

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடையை விலக்க,  சர்தார் வல்லபபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தார்.  ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும், அரசியலில் ஈடுபடாது என்று 1949-ல் ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதிகளை வரையறுத்தது.  அதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது.

ஆனால், 2013-ல் அது வெளிப்படையாக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையின் மூலம், தான் வகுத்துக்கொண்ட அமைப்பு விதிகளுக்கே முரணாக நடந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அமைப்பு விதிகளிலேயே, "அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்போம்" என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவை ஆர். எஸ்.எஸ். இப்போது தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை (நரேந்திர மோடி) அறிவிப்பதில் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பை அது அடக்கிவிட்டது. இதைவிட வெளிப்படையான அரசியல் நடவடிக்கை வேறு இருக்க முடியாது.


ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட காரணம்: 1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்.வெறுப்புணர்வு பொங்க முஸ்லிம்களை அவர்கள் தாக்குவதையும் இந்த வகுப்புவாத வெறியின் உச்சகட்டமாக மகாத்மாவையே கொன்றதையும், காந்திஜியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கியதையும் படேல் அதில் சுட்டிக்காட்டினார். காந்திஜியைக் கொல்லக் காரணமாக இருந்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்கப்படவில்லை; வன்முறையை வளர்த்தது, அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்து அதைச் சீர்குலைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காகத்தான் தடை விதிக்கப்படுகிறது என்பதை அதில் அவர் விவரித்திருந்தார்.

இதற்குப் பிறகே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய இயக்கக் கொடியையே குருவாக மதிக்கிறது, அந்தக் கொடியை மட்டுமே தன்னுடைய அலுவலகங்களில் ஏற்றுகிறது). தங்களுடைய அமைப்புக்கு எழுத்துப்பூர்வமான அமைப்பு விதிகளை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். தலைமை மறுத்தது. அரசுக்கும் அதற்கும் இடையில் நீண்ட போராட்டம் நடந்தது. முடிவில் படேல் வென்றார். இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது. அன்று 'அரசியலிலிருந்து விலகி நிற்போம்'என்று படேலுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இப்போது பின்வாங்கிவிட்டது.
 
நன்றி http://www.sinthikkavum.net/

Posted by tamilnadu on 7:45 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "வல்லபாய் பட்டேல் ஏன் RSS இயக்கத்தை தடை செய்தார்?"

Leave a reply